சரவண பவன் உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ராமசாமியின் மகள் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தோடு, சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று 2001-ம் ஆண்டு கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வழக்குத் தொடர்பாக ராஜகோபால், அவரது மேலாளர் டேனியல் உள்பட 9 பேரை சென்னை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், கடத்தல் வழக்கிலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே போன்று ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டையாக அதிகரித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அத்துடன் ஜூலை 7ம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி நேற்று நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. மேலும் உடல் நலிவை காரணம் காட்டி, சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜகோபால் சரணடைய விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது