தமிழகம் முழுவதும் பி.இ மாணவர்கள் சேர்க்கையின் போது கணினி சர்வர் முடங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில் முதல் சுற்று கவுன்சிலிங்கிற்கு கட் ஆப் அடிப்படையில் 1 முதல் 9 ஆயிரத்து 892 வரை இடம் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதனையடுத்து நுழைவு கட்டணம் செலுத்திய முதல் சுற்று மாணவர்களுக்கு கலந்தாய்வு இம்மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் நடப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது. இதையடுத்து மாணவர்கள் நேற்று காலை முதல் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்ய முயன்றனர்.இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ஆன்லைனில் முயற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் சேவையை மேற்கொண்டதால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஸ்தம்பித்தது. இதனால் சர்வர் வேகம் குறைந்து முடங்கியதால் நீண்ட நேரம் ஆகியும் மாணவர்களுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து காத்திருந்த மாணவர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சர்வர் மெதுவாக இயங்கத் தொடங்கியது. இதையடுத்து டோக்கன் வரிசைப்படி மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. இதில் சர்வர் முடக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க சென்னை தொழில் நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் முயற்சி எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதல் நாள் கவுன்சிலிங்கில் சர்வர் முடக்கத்தால் கல்லூரியில் சேராத மாணவர்கள் அடுத்த கவுன்சிலிங்கில் சேரமுடியுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய கவுன்சலிங்கில் சர்வர் முடங்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறு வாய்ப்பு வழங்க தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.