சோளிங்கர் ரயில் நிலையத்தில் ரயில்களின் சக்கரங்களுக்கு இடையே கடந்து செல்லும் நிலை
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும், சோளிங்கர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகள் இல்லாததோடு, சரக்கு ரயில்களின் சக்கரங்களுக்கு இடையே நுழைந்து தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
வேலூா் மாவட்டம், சோளிங்கரில், புகழ்பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரயில்மூலம் வந்து செல்கின்றனர். மேலும், இந்த ரயில் நிலையத்தில் சென்னை, பெங்களூரு, வேலூா், ஈரோடு, சேலம் போன்ற இடங்களுக்கு செல்லும் விரைவு இரயில்களும் நின்று செல்கின்றன. இது மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமானோர் ரயில் மூலம் பயணிக்கின்றனர். இதன் காரணமாக சோளிங்கர் ரயில் நிலையம் எப்போதும் கூட்ட நெரிசலோடு காணப்படுகிறது. இந்நிலையில், ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. நிழற்கூரை கூட இல்லாததால் கடும் வெயிலிலும், மழையிலும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு நடைமேடைக்கு செல்ல தண்டவாளத்தை கடந்தே பயணிகள் செல்லுகின்றனர்.அதிலும் தண்டவாளங்களில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு ரயில்களின் சக்கரங்களுக்கு இடையே நுழைந்து ஆபப்பதான முறையில், நடைமேடைக்கு பயணிகள் செல்லுகின்றனர். ஆபத்தை உணராமல் இவர்கள் இவ்வாறு செல்லும் போது, விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே ரயில்வே நிர்வாகம், பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.